மேஷ ராசி

கோடிஸ்வர யோகம் அளிக்கும் குரு பகவான்

விடா முயற்சியே விஸ்வரூப வெற்றி என்பதை உணர்ந்து கொண்ட மேஷ ராசிக்காரர்களே. இந்த ஆண்டு கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாகவே உள்ளது. சுப கிரகமான குருபகவான் எட்டாம் வீட்டில் இருந்தால் அவர் பார்க்கும் வீடுகள் உங்களுக்கு பணவரவையும் லாபத்தையும் தரும். மார்ச் மாதம் முதல் அவர் அதிசாரமாக தனுசு ராசிக்கு செல்கிறார். சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். அரசாங்க விஷயங்கள் அனுகூலமாக முடியும். தந்தை ஆதரவாக இருப்பார். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.10.4.19 முதல் 8.8.19 வரை வக்ரகதியிலும் செல்வதால், அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டாகும். அக்டோபர் மாதம் நிகழ உள்ள குருப்பெயர்ச்சி அதி அற்புதமான யோகங்களை தரப்போகிறது. பாக்கிய ஸ்தானத்தில் உள்ள கிரகங்களின் சஞ்சாரத்தினால் நீங்கள் வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது. பொருளாதார நிலை படு சூப்பராக இருக்கும் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை காலி செய்ய பல வழிகள் இருந்தாலும் அதை சுப விரைய செலவாக மாற்றி விடுங்கள். ராகு கேது பெயர்ச்சியினால் நன்மைகள் நடைபெறும். 3ம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். பார்க்கிற வேலையிலோ திருப்தி இல்லாத நிலைமாறி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். பெண்களுக்கு புத்திர ஸ்தானம் 9ஆம் பாவம், இந்த இடத்திற்கு கேது வருவதால் புத்திர பாக்கியமும் அதனால் பெற்றோர்களுக்கு புகழ் பெருமை கிடைக்கும். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாதித்தியம் கிடைக்கும்.