மிதுன ராசி

மிதுனம்

(மிருக சீரிஷம் 3-4ம் பாதங்கள், திருவாதிரை 1-2-3-4 பாதங்கள், புனர்பூசம், 1,2,3ம் பாதங்கள்)
வான மண்டலத்தில் மூன்றாவது ராசியாக வலம் வரும் மிதுனம் ராசியில் பிறந்த உங்களுக்கு
உங்கள் ராசி நாதன் புதன் ஆவார். புதன் புத்திக்கும், வித்தைக்கும், ஞானத்துக்கும் அதிபதியாவார். காக்கும் கடவுளான திருமால் புதனுக்குரிய தெய்வமாவார். எனவே திருமால் உலகத்தை காப்பது போல் நீங்களும் பலரை காப்பாற்றும் பொறுப்பு உடையவர்களாவீர்கள்.

பலருடைய பேச்சுகளையும், சிந்தனைகளையும் மாற்றிக் கொண்டே இருப்பீர்கள். எதையும் மனதால் கணக்கு போடும் உங்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியானது சற்று சுமாரான பலன்களையே கொடுக்கும்.

இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் சனி பகவான் கோசாரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். இனி அவர் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் கணடச்சனியாக அமர்ந்து பலன்களை கொடுப்பார்.

6ம் இடத்தில் இருந்தாலும் அலைச்சல், வேதனை, நோய்வாய்ப்படுதல் கடன் இவையெல்லாம் கொஞ்சமாக இருந்தது. இனி சஞ்சரிக்கவிருக்கும் 7ம் இடம் என்பது கண்டச்சனி என்றாலும் ராசிக்கு கேந்திரமாக இருப்பதால் சனியினுடைய கடுமை வரும் காலங்களில் சற்று குறைந்து காணப்படும். எதையும் சிந்தித்து செயல்படும் உங்கள் எண்ணம்தான் உங்கள் வாழ்க்கையின் சிறப்பு என்று சொன்னால் அது மிகையாகாது.
சனியானவர் உங்களது ராசிக்கு 8 மற்றும் 9ம் வீட்டிற்கு அதிபதியாகி 7ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது சற்று சுமாரான பலன் தான் என்றாலும் அவர் குரு வீட்டில் சஞ்சாரம் செய்வதால் 
அடிக்கடி ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். செயல்களில் சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் காரணமாக அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் விலகி வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய யோகம் கூடிவரும். 
சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால் தெய்வ அனுகூலம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். நீங்கள் யார் என்று உலகிற்கும் மற்றவர்களுக்கும் தெரியவரும். பேச்சில் சாமர்த்தியம் கூடும்.

பணப் புழக்கம் அதிகரிக்கும், கடன் கொடுத்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் சிந்தனை சக்தியும் மிகுந்து காணப்படும்.
குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பம் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ வழி ஏற்படும்.

குடும்பத்தில் புதிய வரவுகள் வந்து சேரும். அதனால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும். சகோதர, சகோதரிகளின் அன்பும், ஆதரவும் இருந்து வரும். 
தன்னம்பிக்கையும் ஊக்கமும் அதிகரிக்கும். எப்பொழுது எல்லாம் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதை தீர்க்க இறைவன் ஒருவரை உங்களுக்கு அனுப்பி வைப்பார்.

தாயரால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். தாயாரின் அன்பும் ஆசியும் கிட்டும். பழைய இடங்களை விற்று புதிய இடம் வீடு, வண்டி, வாகனங்கள், விட்டு உபயோக பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். உயர்கல்வி பயில வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும்.

இதுவரை குடும்பத்தில் நடைபெறாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் அமையும்.

காதல் விஷயங்களில் மன ஈடுபாடு அதிகரிக்கும் ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும் அடிக்கடி விருந்து கேளிக்கைளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வந்து சேரும். யாருக்கும் தேவையில்லாமல் பணம், கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. தேவையில்லாத விஷயங்களில் தலையிடக் கூடாது.

வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். ஆனால் வேலையில் திருப்தியற்ற நிலைமையே அமையும். எனவே கிடக்கும் வேலையை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டுவிடக் கூடாது. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. கடன்களை கட்டுக்குள் வைத்து கொள்ளல் வேண்டும்.

வேலையாட்களால் நன்மை். உண்டாகும்.
சரியான நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும். தேவையற்ற உணவுப் பண்டங்களை தவிர்ப்பது உங்கள் உடல் நலத்திற்க்கு நல்லது. தள்ளிப்போன திருமண சுபகாரியங்கள் நடக்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். வழக்குகளில் வெற்றி கிட்ட வாய்ப்புகள் அதிகம்.

அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. 
ஒரு சிலருக்கு வேலையில் இடமாற்றம், ஊர் மாற்றம் அமையும். வேலையில் உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு கிட்டும். சக தொழிலாளர்களால் தேவையற்ற மன வருத்தங்கள் உண்டாகும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு சுமாராக இருந்து வரும்.

நண்பர்களால் எதிர்பார்த்த, பாராத உதவிகள் வந்து சேரும். எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பார்கள். 
எனவே எதிரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை.